உலகத்தின் எல்லா மூலைகளையும் உற்றுப் பார்த்து உணர்ந்து தெளிந்து எழுதுபவதையே தன் குறிக்கோளாகக் கொண்டும். விதைத்தால் அறுக்கலாம்; விளைந்தால் பொறுக்கலாம் என்று வீரியத்துடன் செயல்பட்டவர் ஆலந்தூர் மோகனரங்கன்.
துன்பங்களைத் தோளில் தூக்கிச் சுமக்கவும், தோல்விகளோடு தோழமை பாராட்டுவதும் மனச்சான்று நடத்தும் மயிலாட்டத்தில் மனக்குரலின் கட்டளைக்கே பணிவதும் எந்த நிலையிலும் அகந்தை கொள்ளாமல் இருப்பதும் அறிவுக்கே வணங்குவதுமாகிய பகுத்தறிவு நெறிகளே கவிதைகளின் வழியே வாழ்வில் கற்றுக் கொள்ள ஏராளமான பாடங்களை கற்றுக்கொடுத்தவர்.
எளிமையான வாழ்க்கையும் வலிமையான லட்சியங்களும் கொண்ட இக்கவிஞர் தொடாத துறைகள் இல்லை. பெற்ற விருதுகளுக்கும் கணக்கில்லை. எளிய நூலகராய் விரும்பி ஏற்ற பணியே இவர் உச்சங்களைத் தொட ஏணியானது. தமிழ் இலக்கியப்பணிக்காகத் தன் வாழ்நாளைச் செலவழித்த கவிஞருக்கு மரபுக் கவிதையே உயிர்மூச்சாய் கொண்டு மூழ்கி முத்தெடுத்தவர்.
காற்றில் கலந்துவரும் இவரின் மெல்லிசைப் பாடல்களுக்கு மயங்காத உள்ளங்கள் இல்லை. இவர் கவிதைகளைப் படிக்காத மாணவச் செல்வங்களில்லை. உலகமெல்லாம் உலாவரும் கவிதைகளால் இலக்கிய உள்ளங்களில் எல்லாம் உறவாடி வருபவர். வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளாரின் சந்தப்பாடல்களை ஆறு ஆண்டுகள் ஆழ்ந்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
அடக்கத்தை முன்னால் வைத்துக்கொண்டு ஆற்றலைப் பின்னால் வைத்துக்கொண்டு பணிவோடு இலக்கியப் பயணத்தை நடத்தியவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்களைப் பற்றி..
மொழி மறக்கடிக்கப்படும் இன்றைய நாளில் அன்றைக்கு ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்கள் தமிழ்ப்பா புனைவதில் முத்திரை பதித்த பெரும் பாவலர் ஆவார். கிளை நூலகராகப் பணிபுரிந்தபடியே புகழ்பெற்ற பாக்களையும் இசைப்பாக்களையும் எழுதியவர்.
பிறப்பு: ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்கள் 01.06.1942 இல் சென்னையில்-ஆலந்தூரில் பிறந்தவர். பெற்றோர் கோ.மீனாம்பாள், மா.கோபால் ஆவர்.
கல்வி: சென்னைத் தியாகராயநகர் உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் படிக்கும்பொழுது புதிய பாதை என்னும் கையெழுத்து ஏட்டை நடத்தியவர். பள்ளி இலக்கிய மன்றச் செயலாளராகச் செயல்பட்டவர். மாணவப்பருவத்தில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றவர்.
ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்கள் அகவை பதினெட்டில் நூலகத்துறையின் பணியில் சேர்ந்தார். பணிசெய்துகொண்டே புலவர், பி.லிட், முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெற்றவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் மூன்றாண்டுகள் முழுநேர ஆய்வாளராக இருந்து பேராசிரியர் இரா.குமரவேலனார் நெறிப்படுத்தலில் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர்.
ஆலந்தூரில் கவிதைவட்டம் என்னும் இலக்கிய அமைப்பை ஏற்படுத்தித் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கவிஞர்கள் வந்து கலந்துகொள்ளும் கவியரங்குகளை நடத்தியவர்.
நூறாண்டுகளுக்கு முன்பு வெளிவந்த நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் பணியில் ஈடுபட்டு, ஆறுமுக நாவலர், சுன்னாகம் குமாரசாமிப் புலவர், சபாபதி நாவலர், பரிதிமாற்கலைஞர், அரசஞ் சண்முகனார் ஆகியோரின் நூல்களை வெளியிட்டவர்.
அறிஞர் அண்ணா அவர்கள் 1942 முதல் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து முதல்முறையாக நூல்வடிவம் கொடுத்து 22 தொகுதிகளாக வெளியிட்டவர். மறைமலையடிகள், திரு.வி.க, கா.சு.பிள்ளை, மயிலை சீனி வேங்கடசாமி, பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் உள்ளிட்ட அறிஞர்களின் நூல்களை மறுபதிப்பு செய்த பெருமைக்குரியவர்.
காலத்தை ஒட்டி 2009 முதல் குறும்பா என்னும் பெயரிலும், குறுந்தொகையின் குழந்தைகள் என்னும் பெயரிலும் ஹைக்கூ கவிதைகள் எழுதியுள்ளார்.
மு. வரதராசனார் பற்றி ‘வணக்கத்துக்குரிய வரதராசனார் கதை’என்னும் தலைப்பில் இவர் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல் 1982 ஆம் ஆண்டு தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது. ‘தாத்தாவுக்குத் தாத்தா’ என்னும் தலைப்பில் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை வரலாற்றையும் இவர் எழுதியுள்ளார்.
எண்ணற்ற இசைப் பாடல்களையும் கவிதை நாடகங்களையும் படைத்துள்ளார். இவருடைய “இமயம் எங்கள் காலடியில்” என்னும் கவிதைத் தொகுப்புநூல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளது. வானொலி, தொலைக்காட்சி, பாவரங்கமேடை என்று பல ஊடகங்களில் பங்கேற்றுள்ளார்.
தமிழக அரசின் பாவேந்தர் விருது, குழந்தை இலக்கிய மாமணி, விஜி.பி. விருது, கவிவேந்தர், முத்தமிழ்க்கவிஞர் உள்ளிட்ட பட்டங்களையும் விருதுகளையும் பெற்ற பெருமைக்குரியவர். இவர் எழுதிய பொன்னம்மா ஒரு புதுமைப்பெண் என்ற நாடகம் ஏ.வி.எம்.அறக்கட்டளையின் தங்கப்பதக்கம் பரிசு பெற்றது.
இலக்கியப் பயணமாக மலேசியா, தாய்லாந்து, மொரிசீயசு, உள்ளிட்ட அயல்நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.
தில்லியில் உள்ள தேசியப் புத்தக நிறுவனத்தார் இவர்தம் கவிதைகளை ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழிபெயர்த்துள்ளனர். ஞானபீட நிறுவனத்தார் இவர்தம் கவிதைகளை இந்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர்.
ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்களின் பாடல்கள் பள்ளிப் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. தமிழக அரசின் பாட நூல்கள் மட்டுமன்றிக் கர்நாடக மாநிலத்தின் தமிழ்ப்பாட நூல்களிலும், சிங்கப்பூர், மலேசியா, மொரிசீயசு நாட்டுத் தமிழ்ப்பாட நூல்களிலும் இவரின் பாடல்கள் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன.
ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்களின் துணைவியார் பெயர் திருவாட்டி வசந்தா மோகனரங்கன். இவர்களுக்கு முனைவர் மோ.பாட்டழகன், மருத்துவர் கவிமணி, மருத்துவர் மோ.தேன்மொழி, மோ.வெற்றியரசி, மருத்துவர் மோ.அன்புமலர், மருத்துவர் மோ.கலைவாணன் என்னும் மக்கட் செல்வங்கள் உள்ளனர்.
கவிஞர் அகவை 47-ல் (01.11.1989) விருப்ப ஓய்வு பெற்று முழுநேர இலக்கியப் பணியாளனாக செயல்பட்டு வருகிறார். வசந்தா பதிப்பகத்தின் மூலம் அருமையான பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்து வருகிறார். இவரின் நூல்களுக்குத் தமிழன்பர்கள் நடுவே நல்ல வரவேற்பு கிடைத்தள்ளன. நூலக இயக்கம் தமிழ் நூல்களை ஆதரிக்கிறது.
ஆலந்தூர் கோ.மோகனரங்கன் நூல்களுள் சில:
01. ஆலந்தூர் மோகனரங்கன் கவிதைகள்
02. பள்ளிப் பறவைகள்
03. குப்பை மேட்டுப் பூனைக்குட்டி
04. வணக்கத்திற்குரிய வரதராசனார் கதை
05. இமயம் எங்கள் காலடியில்
06. கொஞ்சு தமிழ்க்கோலங்கள்
07. பொன்னம்மா ஒரு புதுமைப்பெண்
08. பொய்யே நீ போய்விடு
09. தமிழ்க் கவிதைகளில் சந்த அமைப்பு: வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார் சிறப்பாய்வு
10. நினைத்தால் இனிப்பவளே
11. இதயமே இல்லாதவர்கள்
12. இளைஞர்களுக்கு ஓர் எச்சரிக்கை
13. ஆலந்தூர் மோகனரங்கன் சிறுகதைகள்
14. கவிதை எனக்கோர் ஏவுகணை
15. குறுந்தொகையின் குழந்தைகள்(ஐக்கூ)
16. பிறர் வாழப்பிறந்தவர்கள்
17. ஆலந்தூர் மோகனரங்கன் மெல்லிசைப்பாடல்கள்
18. தாத்தாவுக்குத் தாத்தா
19. முத்தமிழ்க்கவிஞர் மோகனரங்கன் கவிதை நாடகங்கள்
20. கவிராயர் குடும்பம்
21. நாட்டு மக்களுக்கு நல்ல நாடகங்கள்
மேற்கொள் செய்திகளாக சில...
சிறுவர்கள் “எந்த நிலையிலும் உண்மை பேசவேண்டும்’’ என்னும் கருத்தை முதன்மையாக வைத்து "பொய்யே நீ போய்விடு!' என்ற கவிதை சிறுவர் கவிதை நாடகத்தை தமிழில் முதலில் எழுதியவர் என்ற சிறப்பை பெற்றவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன்.
1967-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று கவிஞரின் முதல் மெல்லிசைப் பாடல் சென்னை வானொலியில் ஒலிபரப்பானது.
"கோயில் உனக்கெதற்கு? - மனக்
கோயில் இருக்கையிலே - புறக்
கோயில் உனக்கெதற்கு'
என்று தமிழ்த்தாயை வாழ்த்திப் பாடிய பாடல் அது. இதையடுத்து கவிஞரின் மெல்லிசைப் பாடல்கள் காலை, மதியம், மாலை என வானொலியில் கோலோச்சின.
"இன்னும் பாட நினைக்கின்றேன்
இன்னல் யாவும் ஒழியும்வரை
தென்றல் வாழ்வில் வீசும்வரை
தேனும் பாலும் சேரும்வரை
இன்னும் பாட நினைக்கின்றேன்' என்ற பாடல்.
இதேபோன்று "வைரமூக்குத்தி' என்னும் கவிதை நாடகம், "அமைதி', "கயமையைக் களைவோம்', "தலைவாசல்' போன்ற கவிதை நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகி நேயர்களின் பாராட்டையும், புகழையும் ஒருசேர பெற்றுத் தந்தவை.
“காலமெனும் மலையிடையே கவிதை ஒரு தேனருவி”, எனவும்
“ஆசைக்குப் பாடுவோரும்
அழகுக்குப் பாடுவோரும்
ஓசைக்குப் பாடுவோரும்
உணர்வுக்குப் பாடுவோரும்
பூசைக்குப் பாடுவோரும்
புலமைக்குப் பாடுவோரும்
காசுக்குப் பாடாரானால்
காலத்தை வென்று வாழ்வார்!”
எனவும் பாடியுள்ள வரிகள் இலக்கியச்செழுமை கொண்டன.
கவிதைகளில்...
இறுதி நாளிலும் இனிக்கும் தமிழ்ப்பா!
இரண்டடி நடந்தால் இருமினேன்! பொருமினேன்!
உருண்டது வியர்வை! இருண்டன கண்கள்!
மும்முறை விழுந்தேன்; மூலையில் கிடக்கவா?
அம்மா என்றேன்! அவள்போய் மறைந்தாள்!
“இன்னுமா அழைத்தாய்?” எழுப்பினால் மனக்குரல்!
அன்னையே! இங்கே யாரைநான் அழைப்பேன்?
உண்ணவும் உடுத்தவும் உன்னால் கற்றவன்!
எண்ணவும் எழுதவும் என்னைநீ வளர்த்தனை!
தின்றால் எதுவும் செரிப்ப தில்லை;
சொன்னால் கூடத் தொடர்ந்து கொடுத்தார்!
அடிக்கடி கழிப்பறை அழைக்கும் நெருக்கடி!
இடிக்கிற வானம் இடிப்பது போல!
கடிக்கிற நாயைக் கட்டிவைப் பார்கள்
துடிக்கிற வாய்க்கு தூண்டிலா உண்டு?
விழுங்கினால் தொல்லை! விலக்கினும் தொல்லை!
அழுங்குரல் கேட்கும் அடிவயிற் றுக்குள்!
நரைத்த தலையோ நடுங்கும்! வாழ்வில்
கரைத்த இளமை கனவில் தோன்றும்!
குதிரைப் பாய்ச்சல்; குரங்கின் சேட்டை
முதலை மூர்க்கம் முழுவதும் போயின!
கடைவாய் எச்சில் மடைவாய் ஆகி
நடைபோய்த் தேய்ந்து நான்கிடந் தேனே!
என்செவி கேட்க இனிக்கும் தமிழ்ப்பா
ஒன்றோ இரண்டோ ஓது வீரே!
எனவும் பாடியுள்ள கவிதை வரிகள் என்றும் இலக்கியச்செழுமை கொண்டவை.
"கனவுப் பூக்கள்' என்ற குறுங்காப்பியம், "கல்வி உன்னைக் காப்பாற்றும்', "அறம் வளர்ப்போம் வாருங்கள்', "அறிஞர் ஆவோம் வாருங்கள்', "இந்தியா எங்கள் சொத்து'- போன்றவை குறிப்பிடத்தக்கன. "அழகிய தமிழில் எழுதுங்கள்' என்னும் குழந்தைப் பாடல்கள் அடங்கிய நூலை அரசின் கரும்பலகைத் திட்டத்தின் கீழ் ஆறாயிரம் படிகள் வீதம் இருமுறை வாங்கி தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கு அளித்துள்ளனர்.
நன்றி: தினமணி.
0 comments
Post a Comment