30 March 2014

சொற்களும் எழுத்துக்களும் - Tamil Ilakkanam

Tamil Ilakkanam - Sorkalum Ezhuththukkalum

சொற்களும் எழுத்துக்களும்


தமிழ்மொழிப் பதங்கள்:

        
நிலைமொழியும் வருமொழியும்

          இரு சொற்களின் புணர்ச்சியில், முதலிலுள்ள சொல் நிலைமொழியெனவும், இரண்டாவதாக வந்து சேரும் சொல் வருமொழியெனவும் அழைக்கப்படும்: -


(உ-ம்)
படிப்பது + யாது
இதில் படிப்பது = நிலைமொழி, யாது = வருமொழி.

பதமும், பகுபதமும், பகாப் பதமும்:- 


          ஒரு சொல் அல்லது வார்த்தையை பதமென்று சொல்கிறோம். அதில் பல்வேறு உறுப்புக்களாக பிரிக்கக் கூடிய சொல் பகுபதம். அப்படி பிரிக்க முடியாத சொல் பகாப் பதம்.: -


(உ-ம்) 
பகுபதம் - கண்டான் = காண் + ட் + ஆன்,
பகாப்பதம் - கல், மண்.

பகுதி, விகுதி என்பது என்ன?:- 


          ஒரு சொல்லில் முதலில் இருக்கும் உறுப்பு பகுதி எனப்படுகிறது. இதனை முதல்நிலை என்றும் சொல்லலாம். அதே சொல்லின் இறுதியுறுப்பு விகுதியாகும். இதனை இறுதிநிலை என்றும் சொல்லலாம்.: -


(உ-ம்) 
"கண்டான்" இதனை காண் + ட் + ஆன் எனப் பிரித்தால்
காண் - முதல்நிலை, ஆன் - இறுதிநிலை.

பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும்:-


          உலகிலுள்ள பொருட்களின் பெயர்களை, செயல்களின் பெயர்களைக் கூறுவன எல்லாம் பெயர்ச்சொற்கள். அதுபோலவே பெயர்கள் செய்யும் செயல்களத்தனையும் வினைச் சொற்களாம். வினையைக் குறிக்கும் பெயர்ச்சொல் வினைப்பெயர். குணத்தைக் குறிக்கும் பெயர்ச்சொல் பண்புப் பெயர்.


பெயர்ச் சொல்:-   (உ-ம்)மரம், கடல்.
வினைச் சொல்:-   (உ-ம்)ஓடினான், ஆடினான்.
வினைப் பெயர்:-   (உ-ம்)ஓடுதல், ஆடுதல்.
பண்புப் பெயர்:-   (உ-ம்)கருமை, சதுரம்

எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்:-


           ஒரு செயலை செய்யும் பொருள் எழுவாயென்றும், செயலைச் சொல்லும் வினைமுற்று பயனிலையென்றும், எழுவாயினால் செய்யப்படுகின்ற பொருளே செயப்படுபொருள் என்றும் வழங்கப்படும். "கண்ணன் புத்தகத்தைப் படித்தான்", இச்சொற்டொரரில்;


கண்ணன் - எழுவாய்
படித்தான் - பயனிலை
புத்தகத்தை -செயப்படுபொருள்


வேற்றுமை, உவமை, உம்மை, தொகை:-


           பெயர்ச்சொற்களில் பொருள் வேறுபாடு செய்வனவே வேற்றுமை எனப்படும். மரத்தை, மரத்தோடு என்று வழங்கும் போது, மரம் என்னும் பெயர்ச் சொல் பொருளில் பல மாறுதல்கள் அடைகிறது. அதனைச் செய்கிற ஐ, ஆல் என்பவையே வேற்றுமையாகும். இவை வேற்றுமை உருபெனவும் சொல்வர். ஒரு பொருளைப் போலவே இருக்கும் மற்றொன்றிற்கு உவமை என்கிறோம். அதுபோலவே ஒன்றிற்கு மேல் பல சொற்களைச் சேர்க்கும் போது இடையில் "உம்" சேர்க்கிறோம். அதுவே உம்மை என்றழைக்கப்படுகிறது. இரு சொற்கள் சேர்ந்து வருவது தொகையெனப்படும்.


வேற்றுமை - (உ-ம்) கண்ணால், கண்ணோடு
உவமை - (உ-ம்) மதிமுகம் (மதி போன்ற முகம்)
உம்மை - (உ-ம்) தமிழும், அழகும், எழிலும்
தொகை - (உ-ம்) செந்தாமரை (செம்மை + தாமரை)

அசை, சீர், அடி, எதுகை, மோனை:-


           ஒரேழுத்து அல்லது ஈரெழுத்து கொண்ட சொல்லின் தொகுதிக்கு பெயர் அசை. செய்யுளில் வரும் ஒரு சொல்லே சீரெனப்படுவது. அதுபோலவே செய்யுளில் உள்ள ஒவ்வொரு வரியும் அடியெனப்படும். அடிதோறும் முதல் சொல்லின் இரண்டாமெழுத்து ஒன்றிவருவது எதுகையெனவும், சீர்களில் முதலெழுத்து ஒன்றிவருவது மோனையெனவும் அழைக்கப்படும்.


அசை - (உ-ம்)
"கடவுள்" - இதில் கட , வுள் . 
சீர் - (உ-ம்)
குறளில் - அகர முதற்சீர், முதல இரண்டாம் சீர்
அடி - (உ-ம்)
பொன்னார் மேனியனே புலித்தோலையரைக் கசைத்து - 
இது முதலடி
மின்னார் செஞ்சடைமேற் மிளிர்க்கொன்றை யணிந்தவனே! - இது இரண்டாமடி.
எதுகை- (உ-ம்)
அழகு, பழகு - இவ்விரு சொற்களில் இரண்டாம் எழுத்து ழகரம் ஒன்றி வருகிறது. இதுவே எதுகை. 
மோனை - (உ-ம்)
அழகு, அன்பு - இவ்விரு சொற்களில் முதலெழுத்து அகரம் ஒன்றி வருகிறது. இதுவே மோனை. 

Keywords : TNPSC - Tamil Ilakkanam Preparation materials, tamil Sorkkal, Tamil Ezhutthukkal, Tamil mozhi pathangal, Paguthi, viguthi, peyarchol, vinaichchol, ezhuvai, payanilai, seiyapadu porul, vetrumai, uvamai, ummai, asai, seer, adi, ethugai, monai

8 comments: